செவ்வாய், 24 டிசம்பர், 2013

செட்டிநாடு கறி வறுவல்

செட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். அசைவ விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த உணவு, மிகவும் சுவையானதும் கூட! சாதம் மற்றும் சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். எங்கள் வீட்டில் இந்த வறுவல் செய்தால் எலும்பு சாம்பார் அல்லது எலும்பு தண்ணிக் குழம்புடன் பரிமாறுவது வழக்கம்!

நீங்களும் செய்து பாருங்களேன்!

தேவையான பொருள்கள்:
மட்டன்   - 250 கி
சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 20
இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகு சீரகத் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 1 மேசைக்கரண்டி
கசகசா  - 1 தேக்கரண்டி
முந்திரி – 3

தாளிக்க:
பிரியாணி இலை – 1
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
ஏலக்காய்  - 1
லவங்கம் – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்   - 2
கறிவேப்பிலை – 1  கொத்து
நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி


செய்முறை:
முதலில் மட்டனை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும். தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சப்பாத்தி, பரோட்டா வகைகளுக்குத்  தொட்டும் சாப்பிடலாம்.

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/08/chettinad-kari-varuval-mutton-fry.html  செல்லவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக