செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு | கருப்பு கொண்டைக்கடலை கறி

செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு | கருப்பு கொண்டைக்கடலை கறி என்றவுடனே அனைவருக்கும் கேரளப்  புட்டும், கடலைக் கறியும் தான் ஞாபகத்தில் வரும். நான் இங்கு கொடுத்திருக்கும் ரெசிபி, செட்டிநாடு சமையலை அடிப்படையாகக் கொண்டது. இது சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
  • கருப்பு கொண்டக்கடலை – 150 கி
  • பெரிய  வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
  • பூண்டு (நசுக்கியது) – 3 பல்
  • தக்காளி (பொடியாக நறுக்கியது)– 2
  • மிளகாய் தூள்  – 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
  • கசகசா – கால் டீஸ்பூன்
  • முந்திரி (விரும்பினால்) – 5  

தாளிக்க:
  • எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • பட்டை  – 1 துண்டு
  • சோம்பு  – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
  1. கொண்டைகடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 
  5. பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 
  6. இத்துடன்  மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைகடலை சேர்க்கவும். இத்துடன் 1 கப்  தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும். 
  7. பிறகு  உப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி, தோசை, ரொட்டி போன்ற டிபன் ஐட்டங்களுடன் தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.


லேபல்கள்: சைவ சமையல் குறிப்புகள், செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி?, கொட்டை வகை குழம்புகள், கொட்டை வகைகள், நீரிழிவு நோய்க்கான சமையல் குறிப்புகள்.
செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு ரெசிபியை ஆங்கிலத்தில் அறிய  http://ranistreat.blogspot.in/2014/06/chettinad-kondaikadalai-kuzhambu-black.html செல்லவும்.

ஞாயிறு, 15 ஜூன், 2014

செட்டிநாடு நண்டு மசாலா | நண்டு மிளகு மசாலா

தமிழில் எழுத ஆசைப்பட்டு இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். வாரம் ஒரு பதிவாவது இடம் பெற வேண்டும் என்று எண்ணுவதோடு சரி. இப்போதெல்லாம் ஆங்கில வலைபதிவிலேயே வாரம் ஒரு போஸ்ட் தான் செய்கிறேன். வீடு, ஆபீஸ் என்று வேலை சரியாக இருக்கிறது.

இப்போல்லாம் பேஸ்புக்ல ரொம்ப பேமஸான ஓட்டல்கள்ள பிரியாணிய  பல்லியோட பரிமாறுரதையும், கிரேவில கிடக்குறதையும் போட்டோவா எடுத்து போடுறாங்க! எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் நான்-வெஜ் சாப்பிடத்தான் அதிகமா ஓட்டலுக்கு போறாங்க. என்னோட அட்வைஸ் என்னன்னா அடிக்கடி ஓட்டல் செல்வதை குறைத்துக் கொண்டு, பிடிச்ச அயிட்டங்கள வீட்டிலேயே செய்ய பழகி சாப்பிடலாம். அதுக்காகத் தான் ரொம்ப ருசியான செட்டிநாடு நண்டு மசாலா | நண்டு மிளகு மசாலாவுக்கான செய்முறையை இங்கே கொடுத்திருக்கேன். இதை செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க!
தேவையான பொருள்கள்:

  • நண்டு  - 500 கி
  • பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1  
  •  தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2 அல்லது 3  
  • மஞ்சள் தூள்½ தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
  • தேங்காய் – 1 மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3  
  • பூண்டு – 15 பல்
  • மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • கசகசா  - 1 தேக்கரண்டி

தாளிக்க:
  • பட்டை - சிறிய துண்டு
  • கல் பாசிசிறிது
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – 1  கொத்து
  • எண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

செய்முறை:
  1. முதலில் நண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து, தேவையான சைஸில் துண்டுகளாக்கி வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.
  3. ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.
  4. பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே  கிளறி விடவும்.
  6. நண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

சுவையான செட்டிநாடு நண்டு மிளகு மசாலா சாப்பிட தயார்! இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
  • பச்சை மிளகாய் காரத்துக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.

லேபல்கள்: நண்டு சமையல் குறிப்பு, அசைவ சமையல் குறிப்புகள், செட்டிநாடு நண்டு மசாலா செய்வது எப்படி, கடல் உணவு சமையல் குறிப்புகள்

செட்டிநாடு நண்டு மசாலா ரெசிபியை ஆங்கிலத்தில் அறிய   http://ranistreat.blogspot.in/2013/12/chettinad-crab-masala-chettinadu-nandu.html செல்லவும்

சனி, 3 மே, 2014

சோள தோசை | வெள்ளை சோள தோசை | Jowar Dosa

சோள தோசை... சிறு தானியத்தில் ஒன்றான வெள்ளை சோளத்தை அரிசிக்கு பதிலாக பயன்படுத்தி செய்யும் இந்த தோசை மிகவும் ஆரோக்கியமானது. நான், ஏற்கனவே, சோள பணியாரம், சோள அடை ஆகியவற்றுக்கான செயமுறைகளை  எனது ஆங்கில வலைப்பதிவான ராணீஸ் ட்ரீட்டில் பதிவு செய்துள்ளேன். சோள தோசைக்கான செய்முறை இதோ!


தேவையான பொருட்கள்:
  • வெள்ளை சோளம் – 1 கப்
  • உளுத்தம்பருப்பு  – ½ கப்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்  
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
  1. வெள்ளை சோளத்தை தனியாகவும், உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்தும் கழுவி, களைந்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. உளுத்தம்பருப்பு, வெந்தயக் கலவையை இட்லிக்கு அரைப்பது போல நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, சோளம், ப.மிளகாய், சீரகம் சேர்த்து  நைசாக அரைத்து உளுத்தம்பருப்பு மாவோடு உப்பு சேர்த்துக் கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  3. அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, தோசை மாவுப் பதத்திற்கு மாவை கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். 
  4. இந்த தோசை  மிகவும் மெல்லிதாக, கிரிஸ்பாக வார்க்க வரும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்தும் இந்த தோசையை செய்யலாம்.

மிக ஆரோக்கியமான இந்த தோசையை தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

Tags: Chola dosai recipe in Tamil, Millet  Recipes, Sorghum Dosa recipe, Jowar dosa recipe, Healthy Breakfast recipe, வெள்ளை சோள தோசை, சர்க்கரை நோய்க்கான சிறப்பு உணவுகள், ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள், காலை/மாலை நேர உணவுகள், கிராமிய உணவுகள்

சனி, 8 மார்ச், 2014

பசலைக்கீரை சப்பாத்தி

பசலைக்கீரையில் செடி பசலை, கொடி பசலை என பல வகைகள் உள்ளன. நான் ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் செடியில் முளைக்கும் பசலைக்கீரை  அழகிய வயலட் நிறப் பூக்களுடன் கீரை விற்கும் பெண்மணி வைத்திருந்ததை பார்த்தவுடன் வாங்கினேன். சென்னையில் இந்த கீரையை அது வரை பார்த்ததில்லை; முதல் முதலாக பார்த்ததில் சந்தோஷம். இந்த கீரையை  தூத்துக்குடியில் இருக்கும் போது ரெகுலராக கூட்டு மற்றும் ரொட்டி செய்வது வழக்கம். எதை செய்தாலும் அந்த பசலைக்கீரையின் மிதமான மணத்துடன் மிகவும் அருமையாக இருக்கும். இந்த பசலைக்கீரை பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு என்று என் பாட்டி அடிக்கடி கூறுவார். மல்லிகை மகள் சப்பாத்தி இணைப்புக்காக பசலைக்கீரை சப்பாத்தி செய்முறையை அனுப்பினேன். அதன் செய்முறை இதோ உங்களுக்காகவும்!


தேவையான பொருட்கள்:
  • கோதுமை மாவு – 1 கப்
  • பசலைக்கீரை (பொடியாக நறுக்கியது) – கால் கப்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • ஆம்சூர் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
  1. பசலைக்கீரையை நன்றாக கழுவி, ஆய்ந்து, மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 
  3. பிறகு பொடியாக நறுக்கிய பசலைக்கீரையையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. தேவையான தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து மிருதுவான மாவாக பிசைந்து அரை  மணி நேரம் கழித்து, உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி வைத்துக் கொள்ளவும். 
  5. சூடான தோசைக் கல்லில் இரு புறமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.



இந்த சப்பாத்தி ஆறிய பிறகும் கூட மிருதுவாக இருக்கும். இதனை சாஸ்,  வெள்ளை குருமா  அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: இதே செய்முறையில் மற்ற பசலைக்கீரையிலும் செய்யலாம்.